காஞ்சிபுரம்:மத்திய அரசு ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது முதல், சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெசவு பணியில் சிறப்பாக பணியாற்றும் நெசவாளர்கள், மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பித்து விருது பெற்று வந்தனர். இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ள நெசவாளர்கள் பட்டியல் விபரங்களை, மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து, சிறந்த நெசவாளர் விருது, காஞ்சிபுரம், திண்டுக்கல் என இரு பகுதியைச் சேர்ந்த இரு நெசவாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணன் என்ற நெசவாளருக்கும், காஞ்சிபுரத்தில், திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த, பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலசுப்ரமணியன் என்ற நெசவாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 7ம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ள கைத்தறி தின விழாவில், மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் விருது வழங்க உள்ளார். விருதுடன், தாமிர பத்திரம், சான்றிதழ், 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் திருவள்ளுவர் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள், இந்த விருதை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.ஏற்கனவே, பத்மா, கீதா ஆகிய பெண் நெசவாளர்கள், மத்திய அரசு விருது பெற்ற நிலையில், பத்மாவின் கணவர் பாலசுப்ரமணியன் என்பவருக்கும் இம்முறை தேசிய விருது கிடைத்திருப்பது, சங்க நெசவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசின் விருது பெறுவது எனக்கும், என் குடும்பத் தினருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் நெய்த சேலையை, திருவள்ளுவர் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கமும், நெசவாளர் சேவை மையமும் பரிந்துரை செய்ததற்கு நன்றியை தெரிவிக்கிறேன். ஏற்கனவே, இந்த விருதை என் மனைவி, 2016ல் பெற்றார். நானும் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.-பாலசுப்ரமணியன்,காஞ்சிபுரம்.
விருது பெற காரணமான கோர்வை ரகம்!
காஞ்சிபுரத்தில் பாரம்பரிய ரகமான, கோர்வை ரக பட்டு சேலையை, பாலசுப்ரமணியன் நெய்துள்ளார். பச்சை நிற சேலையில், தாழம்பூ ரேக் டிசைனுடன், பார்டரில் யானை வடிவமும், முந்தியில் சக்கரத்துடன் கூடிய யானை, மயில் வடிவமும் கொண்ட வடிவங்கள் நெய்யப்பட்டுள்ளன. கோர்வை ரகம் என்பது, காஞ்சிபுரம் பட்டு சேலையின் அடையாளமாகும்.இந்த ரக சேலைகளை நெசவாளர்கள் சிரமப்பட்டு நெய்ய வேண்டியிருக்கும். காஞ்சிபுரத்தின் பாரம்பரிய ரகத்தை நெய்ததற்காக, தேர்வாகியிருப்பதாக கைத்தறி துறையினர் தெரிவிக்கின்றனர்.