ஸ்ரீபெரும்புதுார் - : வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்பும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு, லாரிகளில் அதிகளவு பாரம் ஏற்றி செல்வது தொடர்கதையாகி விட்டது.குறிப்பாக, டிப்பர் லாரிகளில் ஜல்லி, கருங்கல், எம்-.சாண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லப்பட்டு வருகின்றன.ஒரு மணி நேரத்திற்கு, 100க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து வரும் டிப்பர் லாரிகள், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அதிவேகமாக செல்வதால், மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, வயதானோர், குழந்தைளோடு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், அதிவேகமாக செல்லும் லாரிகளால், வாரணவாசி, பண்ருட்டி, ஒரகடம், செரப்பணஞ்சேரி உள்ளிட்ட சந்திப்புகளில், சாலையை கடக்க முடியாமால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, விதிமுறைகளை மீறி அதிக பாரங்களை ஏற்றி கொண்டு, அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் மீது, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.