உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர்- மானம்பதி சாலையில், திரவுபதியம்மன் கோவில் எதிரே பழமையான காவல் நிலையம் உள்ளது. இக்காவல் நிலையம், பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்தது.காவல் நிலைய கட்டடத்தின் கூரைக்கான ரீப்பர்கள் பழுதாகி, ஓடுகள் விழுந்து வந்தன. இதனால், மழைக்காலங்களில், கூரை வழியாக மழைநீர் சொட்டும் நிலை இருந்தது.அச்சமயங்களில், ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. மேலும், தொடர் மழையின் போது காவலர்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.மழை மற்றும் வெயிலில் இருந்து, தற்காத்து கொள்ள, காவல் நிலைய கூரை மீது, தார்ப்பாய் போட்டு செயல்பட்டு வந்தது. கனமழைக்கு இந்த தார்ப்பாய் பாதுகாப்பு, போதுமானதாக இல்லை என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்திரமேரூர், சின்னநாரசம்பேட்டை தெருவில், அய்யனார் குட்டை, அரசு முன்மாதிரி நடுநிலைப் பள்ளி அருகே தனியார் கட்டடம் ஒன்றில் செயல்பட துவங்கியது.இந்த வாடகை கட்டடமும் போதுமான இடவசதி இல்லாததால் இட நெருக்கடிக்கு மத்தியில் இயங்கி வருகிறது. பழுதடைந்த பழைய காவல் நிலைய கட்டடமும் தற்போது மிகவும் சேதம் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற நிலையில் உள்ளது.எனவே, உத்திரமேரூரில் கைவிடப்பட்ட பழைய காவல் நிலையத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அக்காவல் நிலையம் இயங்கிய அதே பகுதியில், புதியதாக கட்டடம் அமைத்து காவல் நிலையம் செயல்பட வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை