| ADDED : மே 30, 2024 07:38 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை வழியாக செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இருவழிச் சாலையாக இருந்த இச்சாலை, தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.அதன்படி, உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை வரையிலான சாலை விரிவாக்கம் செய்து, மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை அருகே கடல்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் சாலை உள்ளது.இப்பகுதியில், மீடியன் இடையே சாலையை வாகனங்கள் கடக்க வசதியாக இடைவெளி விடப்பட்டுள்ளது. உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள், இந்த இடைவெளி சாலையை கடந்துதான் பல்வேறு கிராமங்களுக்கு செல்கின்றனர்.இச்சாலை பகுதியில் இதுவரை மின்வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.