உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூட்டி கிடக்கும் வீடுகளுக்கு சீல்: நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அதிரடி

பூட்டி கிடக்கும் வீடுகளுக்கு சீல்: நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அதிரடி

சென்னை, சென்னையில், சட்டவிரோதமாக வாங்கி பல மாதங்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகள், பராமரிப்புக் கட்டணம் செலுத்தாமல் உள்ள, வாரியத்துடன் தொடர்பில் இல்லாத வீடுகளுக்கு, 'சீல்' வைக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், சென்னையில் 1.25 லட்சம் வீடுகள் உள்ளன. தற்போது கட்டப்படும் ஒவ்வொரு வீடும், 13 முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டவை.இவை மத்திய, மாநில அரசு நிதி மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் கட்டப்படுகின்றன. இதற்கு முன், ரேஷன் கார்டை ஆதாரமாக வைத்து, வீடுகள் வழங்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று முதல் ஆறு வீடுகள் வரை வாங்கினர். இன்னும் சிலர், 10 வீடுகளை வாங்கி, வாடகைக்கு விட்டனர். இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதுடன், உண்மையான பயனாளிகளுக்கு வீடு கிடைக்காத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக, ஆதார் கார்டை ஆதாரமாக வைத்து வீடுகள் வழங்கப்படுகின்றன. இதனால், முறைகேடாக வீடு வாங்குபவர்களை தடுக்க முடியும் என, அதிகாரிகள் நம்புகின்றனர். இதற்காக, ரேஷன் கார்டை மட்டும் வைத்து வீடு வாங்கியவர்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சமுதாய வளர்ச்சி பிரிவு களப்பணியாளர்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று ஆவணங்களை சேகரிக்கின்றனர். ஒதுக்கீடு ஆணை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் உள்ள நபர்களின் ஆதார் அட்டையும் சேகரிக்கப்படுகின்றன.மேலும், ஒதுக்கீடுதாரர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி வசிப்பவர்களிடம், ஒதுக்கீடு ஆணை, ஒப்பந்த பத்திரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் உள்ள நபர்களின் ஆதார் அட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. இதை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். அப்படி வழங்காதவர்களின் வீடுகள் கண்காணிக்கப்பட உள்ளன.மேலும், பல மாதங்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகள், பராமரிப்பு கட்டணம் செலுத்தாமல், வாரியத்துடன் தொடர்பில் இல்லாத வீடுகளுக்கு, 'சீல்' வைக்க, வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதன் வாயிலாக, சட்டவிரோதமாக வாங்கிய வீடுகளை அடையாளம் காண முடிவதுடன், வீடு கேட்டு காத்திருக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வீடு வழங்க முடியும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை