காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மரத்தேர், காந்தி சாலை, ஆஞ்சநேயர் கோவில் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவத்தின்போது, ஸ்ரீதேவி, பூதேவியருடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவார்.இந்நிலையில், தேர் நிறுத்தப்பட்டுள்ள காந்தி சாலையில், அவ்வப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டதால், தேர் நிறுத்தப்பட்டுள்ள தேரடி பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், தேரடியில் மழைநீர் தேங்கி, பாசி படர்ந்துள்ளதால்,கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால், நாளடைவில் தேரின் இரும்பு சக்கரம், மழைநீரில் துருப்பிடித்து வீணாகும் நிலை உள்ளது.மேலும், தேரடி ஒட்டியுள்ள பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதனால், சனிக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தேரடியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் கூறியதாவது:தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில், மழைநீர் தேங்காமல் இருக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெற்று, சாலை தரை மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்திற்கு தளம் அமைக்க, மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தேரடியில், உயரமாக தளம் அமைக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.