காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, காரப்பேட்டையில், விபத்து ஏற்படுத்திய லாரியை, நடுவழியில் நிறுத்திவிட்டு, ஓட்டுனர் தப்பி சென்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறுபாலங்கள், மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன.மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் 2022ம் ஆண்டு பணி துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும்.அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிச., முடிக்க வேண்டும். அடுத்த கட்டமாக, காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும்.கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் கால அவகாசம் நெருங்கியும் முடிக்கப்படாமல் உள்ளன.குறிப்பாக, சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்றுப்பாதை அமைத்து விட்டு, மேம்பாலங்கள் கட்டியுள்ளனர். பாலப்பணிகள் நிறைவு செய்யாமல் அரைகுறையாக உள்ளது.மாற்றுப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளும், தான்தோன்றி தனமாக சாலை நடுவே ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதால், வாகன விபத்து அரங்கேறும் அபாயம் உள்ளது.இந்நிலையில், நேற்று, காஞ்சிபுரம் அடுத்த, காரப்பேட்டை அண்ணா புற்று நோய் மருத்துவமனை அருகே செல்லும் மாற்றுப்பாதையில், லாரி ஓட்டுனர் ஒருவர், 2 கி.மீ., துாரத்திற்கு முன், ராஜகுளம் பகுதியில் நேற்று விபத்து ஏற்படுத்திவிட்டு, லாரியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.மாற்றுப்பாதை செல்லும் பிற வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாத சூழல் உருவானது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்காணிக்கும் போலீசாரும் கண்காணிக்கவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, மாற்றுப்பாதையின் நடுவே நிறுத்துவிட்டு சென்ற வாகன ஓட்டி மீது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.