உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தீக்காயமடைந்த நோயாளிகளுடன் 80 கி.மீ., துாரம் அலையும் அவலம் பல்நோக்கு மருத்துவமனையாக்கும் வாக்குறுதி என்னாச்சு?

தீக்காயமடைந்த நோயாளிகளுடன் 80 கி.மீ., துாரம் அலையும் அவலம் பல்நோக்கு மருத்துவமனையாக்கும் வாக்குறுதி என்னாச்சு?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவு இல்லாததால் செங்கல்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் சேவை குறைபாடு ஏற்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே ரோட்டில் இயங்கி வருகிறது. இங்கு, கர்ப்பிணியருக்கு பிரசவம் பார்ப்பது, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை, இதயம், காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், அவசர சிகிச்சை, எலும்பு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இங்கு, 750 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 2,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.இருப்பினும், மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு சேவை குறைபாடுகளால், தினமும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அடிப்படை தேவையான, தீவிர சிகிச்சைக்கான வார்டுகள் கூட இல்லாததால், செங்கல்பட்டு, கீழ்ப்பாக்கம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாக, நோயாளிகள் புலம்புகின்றனர்.குறிப்பாக, தீக்காயத்துக்கான தீவிர சிகிச்சை பிரிவு இல்லாததால், அதிக தீக்காயங்களுடன் வரும் நோயாளிகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு பரிந்துரை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.கடந்த 2022 செப்., மாதம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடந்த காஸ் கிடங்கு வெடித்த சம்பவத்தில், 11 பேர் தீக்காயமடைந்து உயிரிழந்தனர். அதேபோல், கடந்தாண்டு காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை கிராமத்தில் நடந்த வெடி தயாரிக்கும் இடத்தில் நடந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த நபர்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இம்மருத்துவமனையில் தீக்காயத்திற்கு சிகிச்சை பிரிவு தனியாக இருந்தாலும், தீவிர சிகிச்சைக்கான வார்டு இல்லாததால், மேல் சிகிச்சைக்கு, 80 கி.மீ., துாரம் தீக்காயத்துடன் நோயாளி பயணிக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இருக்க வேண்டிய அடிப்படை பணியிடங்கள் கூட இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. உதாரணமாக சிறுநீரக பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு போன்ற மிக முக்கிய சிகிச்சைகளுக்கு இங்கு ரெகுலர் மருத்துவர்கள் இல்லை. சிறுநீரக பிரிவுக்கும், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுக்கு மட்டும், வாரத்தில் இரண்டு நாட்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், முக்கிய உறுப்புகளுக்கு தேவையான மருத்துவர்கள் கூட பல ஆண்டுகளாக நியமிக்காமல் சுகாதாரத் துறை அலட்சியமாக இருந்து வருகிறது.* மருத்துவமனையின் டூ - வீலர் பார்க்கிங் ஏரியா, கரடுமுரடாக சமதளமாக இல்லாததால் பார்வையாளர்கள், நோயாளிகள் இங்கு வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், அப்பகுதி முகம்சுளிக்கும் வகையில் உள்ளது.* காயம் ஏற்பட்டு தையல் போடும் பிரிவில் பணியாற்றும் உதவியாளர்கள், நோயாளிகளிடம் 100 - 200 ரூபாய் வரை கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.* 750 படுக்கைகளுக்கு குறைந்தபட்சமாக, 300 செவிலியர்களாவது இருக்க வேண்டும். ஆனால், 142 பேர் மட்டுமே இருப்பதால், பணிச்சுமை ஏற்படுவதாக செவிலியர்கள் புலம்புகின்றனர்.* பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணியரை, செவிலியர்கள் தரக்குறைவாகவும், அலட்சியமாக நடத்துவதாகவும் கர்ப்பிணியர் புகார் தெரிவிக்கின்றனர்.

15 மருத்துவ உபகரணங்கள் தேவை!

மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், கடந்த பிப்வரி 9ம் தேதி நடந்தது. இதில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, லேப்ரோஸ்கோபிக், எண்டோஸ்கோப் மானிட்டர், கண் வங்கி, எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட 15 வகையான மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுவதாக, தீர்மானம் நிறைவேற்றி, மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தேவைகள் இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், 'மாநில அளவில் நிதி ஒதுக்கீடு செய்து தேவையான உபகரணங்களை வழங்குவர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வராமல் உள்ளது. நடத்தை விதிமுறைகள் முடிந்த பின், தீர்மானம் நிறைவேற்றிய உபகரணங்கள் வந்துவிடும்' என்றார்.

தி.மு.க., வாக்குறுதிகள் என்னாச்சு?

தி.மு.க., சார்பில், கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில், மாவட்ட வாரியான தேர்தல் வாக்குறுதிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, 45 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில், 19வது வாக்குறுதியாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, மருத்துவமனை தரம் உயர்வதற்கான எந்தவித அறிவிப்பும், சுகாதாரத்துறை வெளியிடவில்லை; அரசாணையும் வெளியிடவில்லை. அதே தேர்தல் வாக்குறுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கென புதிய மருத்துவக்கல்லுாரி அமைக்கப்படும் என, 16வது வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லுாரி அமைப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை