உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  13 ஏரிகளில் நீர் இருப்பு கருவி பொருத்தம்... ஜரூர்! :பாசனத்திற்கான நீரின் அளவை அறியலாம்

 13 ஏரிகளில் நீர் இருப்பு கருவி பொருத்தம்... ஜரூர்! :பாசனத்திற்கான நீரின் அளவை அறியலாம்

காஞ்சிபுரம்: ஏரிகளின் நீர்மட்டம் அறியும் வகையில், முதற்கட்டமாக 13 ஏரிகளில் அளவீட்டு கருவிகள், அதற்கான நவீன அறை ஆகியவை அமைக்கப்படுகின்றன. இத்திட்டம் படிப்படியாக காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், இதனால், ஏரி உடைப்பு, பாசனத்திற்கு தேவையான நீரின் அளவு ஆகியவற்றை அறிய முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய பருவ மழைக்கு இந்த ஏரிகள் நிரம்பினால், 50,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்வர்.இதில், தென்னேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட சில முக்கியமான ஏரிகளில் மட்டுமே, ஏரி நீரின் இருப்பு விபரங்களை அளவீடு செய்ய முடிகிறது. பிற ஏரிகளில், நீர் மட்டத்தின் அளவு தெரிந்துக்கொள்ள முடியவில்லை.இதனால், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என, விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக, அனைத்து ஏரிகளிலும் நீரின் இருப்பு விபரத்தை தெரிந்துக்கொள்ளும் விதமாக, டிஜிட்டல் அளவீடு செய்யும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.இந்த கருவி, ஏரி நீரின் அளவை பதிவு செய்து, செயற்கைக்கோளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துவக்கம்

முதற்கட்டமாக, காஞ்சிபுரம் தாலுகாவில், வேளியூர், வளத்துார் ஆகிய இரு ஏரிகளும். ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், கொளத்துார், குண்டுபெரும்பேடு, அமரம்பேடு, வல்லக்கோட்டை, பேரீஞ்சம்பாக்கம், வளர்புரம், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட மொத்தம், 13 ஏரிகளில், நீர் மட்டம் பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.இந்த பணிக்கு, அந்தந்த ஏரிகளின் பிரதான மதகுகளின் மீது, கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு, நவீன அறைகளின் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறை கட்டுமான பணிக்கும், தலா, 2 லட்சம் ரூபாய் வீதம் 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெற்றால், ஏரி நீர் மட்டம் பதிவு செய்யும் கருவி மற்றும் செயற்கைக்கோளுக்கு அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.இதன் மூலமாக, சிறிய ஏரிகளிலும், நீர்மட்டத்தின் அளவு எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும் என, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர். பெயர் வெளியிட விரும்பாத காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அபாயம்

பருவமழை காலத்தில் ஏரி நீரின் இருப்பு விபரம் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. நீர் வரத்து கால்வாய்களில், அதிக தண்ணீர் வரும்போது, ஏரிக்கரை உடைப்பெடுக்கும்அபாயம் உள்ளது.இதை கட்டுப்படுத்தும் விதமாக, ஏரி மதகுகளில் நீர் அளவு பதிவு செய்யும் கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த பதிவு, செயற்கைக்கோள் வாயிலாக நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும்.பேரிடர் காலங்களில், ஏரி நீரை திறந்துவிடுவதற்கும், தண்ணீரை சேமிக்கவும் இந்த கட்டமைப்பு பெரிதளவில் உதவும்.இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை