சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மாடுகளால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம், சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை மைய தடுப்பில் மேயும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நான்கு வழி சாலையாக உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 654 கோடி ரூபாயில், ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே இருக்கும், தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில், 1 மீட்டர் அளவிற்கு இடம் ஒதுக்கி அழகு செடிகள் மற்றும் பிற வகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன. சில தினங்களாக பகலில் வெயில், இரவில் மழை என, பருவ நிலை நிலவி வருவதால், காஞ்சிபுரம் ஆரிய பெரும்பாக்கம், வெள்ளை கேட் உள்ளிட்ட பகுதிகளில், சாலை மைய தடுப்பில் புல் வளர்ந்துள்ளது. இந்த புல்லை, கிராமங்களில் இருந்து மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் மேய்கின்றன. ஆரியபெரும்பாக்கம், வெள்ளைகேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளள மேம்பாலங்களை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். மாடுகளால் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஹாரன் அடிக்கும்போது, மைய தடுப்பில் மேய்ந்துக் கொண்டிருக்கும் மாடுகள் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து ஓடுகின்றன. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், மைய தடுப்பில் மேயும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் கண்காணித்து, வாகன விபத்து தவிர்க்க, மையத் தடுப்பில் மேயும் மாடுகளை பிடித்து, மாட்டு தொழுவத்தில் ஒப்படைக்க வழி வகை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.