| ADDED : நவ 17, 2025 08:05 AM
காஞ்சிபுரம்: புதுப்பாளையம் மாநகராட்சி பள்ளி வெளியே, ஆபத்தான நிலையில் மழைநீர் வடிகால்வாய் பல இடங்களில் சேதமடைந்து உள்ளதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள புதுப்பாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி வெளியே உள்ள சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் சேதமாகி உள்ளது. மழைநீர் வடிகால்வாய் மூடி, பல இடங்களில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற் பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தினமும் இக்கால்வாயை கடந்து ஆபத்தான சூழலில் பள்ளிக்குள் சென்று வருகின்றனர். மழை, வெள்ளம் அதிகம் பாதிக்கும் இடமாக, பேரிடர் மேலாண்மை துறை இந்த இடத்தை அறிவித்து உள்ளது. அடுத்த ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சேதமாகி மோசமான நிலையில் உள்ள மழைநீர் கால்வாயை சீரமைத்து, பள்ளி மாணவர்களை பாதுகாக்க பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.