மேலும் செய்திகள்
சமுதாய கூடங்கள் கட்ட காஞ்சி மக்கள் கோரிக்கை
06-Jul-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுகாதார சான்று, தீயணைப்பு சான்று, கட்டட அனுமதி என, அடிப்படை விதிமுறைகளை கூட பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மாநகராட்சி நிர்வாகம் கிடுக்கிப்பிடியை துவங்கி உள்ளது. ஒரு மாதத்தில் உரிய சான்றிதழ்களை பெறாவிட்டால், 'சீல்' வைக்கப்படும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில், பிள்ளையார்பாளையம், பெரிய காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் திருமண மண்டபங்கள் உள்ளன.கடந்த 15 ஆண்டுகளில் ஓரிக்கை, செவிலிமேடு பகுதியில் புதிது புதிதாக ஏராளமான திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் செயல்படுகின்றன. போக்குவரத்து நெரிசல்
சுப நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கில் வாடகை வாங்கும் திருமண மண்டபங்கள், கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூட வசதி இல்லாமல் கட்டுவதால், நிகழ்ச்சி நடக்கும் நாட்களில் சாலையிலேயே நிறுத்தப்படும் வாகனங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தவிர, விதிமுறைகளை பின்பற்றக்கூடிய விஷயத்தில், பல திருமண மண்டபங்கள் அலட்சியமாக நடந்து கொண்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.சமீபத்தில், காஞ்சிபுரம்மேட்டுத்தெரு அருகே உள்ள பிரபல தனியார் திருமண மண்டபத்தில் இருந்து, ஜெனரேட்டரில் இருந்து வெளியேறும் புகையால், சுற்றி வசிப்போருக்கு தொந்தரவு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு புகார் சென்றது.இது தொடர்பாக, மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, தொழில் உரிமம், தீயணைப்பு துறை சான்று, மாநகராட்சியின் சுகாதார சான்று, திருமண மண்டபத்தின் கட்டட அனுமதி சான்று என, முக்கிய சான்றுகள் இன்றி திருமண மண்டபம் நடத்தி வந்தது தெரிந்தது.தொழில் உரிமம் கூட இல்லாததால், திருமண மண்டபத்திடம் விளக்கம் கேட்டு, சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கியுள்ளனர்.இந்த திருமண மண்டபம் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் இயங்கும் பல திருமண மண்டபங்களும், சுகாதாரத் துறையின் பல விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.குறிப்பாக, தீயணைப்பு சான்று பெறவில்லை. அவசர கால வழி, மண்டபத்திற்குள் தண்ணீர் கொண்டு செல்வதற்கான குழாய் இணைப்புகள் என, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், பல திருமண மண்டபங்கள் இயங்குகின்றன. நோட்டீஸ்
இதனால், அனைத்து திருமண மண்டபங்களையும் கள ஆய்வு செய்து, விதி மீறிய திருமண மண்டபங்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறது.மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியில் விதி மீறும் திருமண மண்டபங்கள் மீது நோட்டீஸ் கொடுக்கும் பணியை துவங்கி உள்ளோம். அடுத்தடுத்து விதி மீறும் மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.அடுத்த ஒரு மாதத்தில், உரிய சான்றிதழ்கள் பெறாத மண்டபங்களின் நிர்வாகிகள், மாநகராட்சியிடம் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்று, விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில், 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நடவடிக்கை எடுக்க தயக்கம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திருமண மண்டபம், பார்ட்டி ஹால் என, 95 இடங்களில் செயல்படுகின்றன. இவற்றில் பல, அரசியல் பின்புலம் கொண்டவர்களால் நடத்தப்படுவதால், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகளுக்கு தயக்கம் ஏற்படுவதால், மாநகராட்சி அதிகாரிகள் மீதும் புகார் உள்ளது. ஏற்கனவே, குப்பை, கழிவுகள் அகற்றும் விஷயத்தில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. திருமண மண்டபங்களில் சேகரமாகும் குப்பை, கழிவுகளை தனியார் வாயிலாக அகற்றப்பட்டு, அவற்றை மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதாக, மாநகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விதிமுறைகளை பின்பற்றாமல், பல திருமண மண்டபங்கள் இயங்குவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.- காஞ்சிபுரம் பகுதி மக்கள்.
06-Jul-2025