காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், 2019ல் பிரிந்தது. மாவட்டம் பிரிவதற்கு முன், 4,300 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டமாக இருந்தது.இதில், வேடந்தாங்கல் சரணாலயம், வண்டலுார் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம், முட்டுக்காடு படகு குழாம், வடநெம்மேலி முதலை பண்ணை என, பல்வேறு சுற்றுலா தலங்கள் இடம் பெற்றிருந்தன.மாவட்டம் பிரிந்த பின், அனைத்து சுற்றுலா தலங்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் இன்றி காணப்படுகின்றன.படகு குழாம், மலை பிரதேசம், கடற்கரை என எந்த வகையான சுற்றுலா தலங்களும் இல்லாததால், காணும் பொங்கலான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்போர், வெளியூர் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர்.பலர் கோவில்களுக்கு சென்ற நிலையில், மற்றொரு தரப்பினர் மாமல்லபுரம், புதுச்சேரி, சென்னை மெரினா, படகு குழாம், பிச்சாவரம் சதுப்பு நில காடுகள், ஏலகிரி, ஏற்காடு என வெளி இடங்களுக்கு சென்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில், சுற்றுலாத் துறை சார்பில் புதிய சுற்றுலா தலங்களை ஏற்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.காஞ்சிபுரம் மாவட்டத்தில், படகு குழாம், தீம் பார்க் என பல்வேறு சுற்றுலா வசதிகளை சுற்றுலா துறை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுகிறது.