செய்யாற்று நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி
உத்திரமேரூர்:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் செய்யாறு உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதி வழியாக பாய்ந்து வரும் செய்யாற்று தண்ணீர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமந்தண்டலம், சிலாம்பாக்கம், மாகரல், காவாம்பயிர், புல்லம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, திருமுக்கூடல் பாலாற்று படுகையை வந்தடைகிறது.பருவமழை காலத்தின் செய்யாற்று நீர்வரத்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து விவசாயம் செழிப்பாகிறது.தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையால், உத்திரமேரூர் செய்யாற்று படுகைகளில் நீர்வரத்து துவங்கி உள்ளது.இதனால், அனுமந்தண்டலம் மற்றும் வெங்கச்சேரி செய்யாற்று அணைக்கட்டு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. மேலும், ஆற்று படுகைகளில் நீர்வரத்து காணப்படுகிறது.வடகிழக்கு பருவமழை துவங்கியும், இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தீவிரம் அடையாத நிலையில், பாலாற்று படுகைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.இந்நிலையில், செய்யாற்று நீர்வரத்தால், உத்திரமேரூர் ஒன்றிய செய்யாற்று நீர்ப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.