| ADDED : டிச 10, 2025 08:08 AM
உத்திரமேரூர்:சீட்டணஞ்சேரியில், காட்டுப் பன்றிகள் கூட்டமாக புகுந்து நாசம் செய்துள்ள கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில், கடந்த ஜனவரியில் நடவு செய்த கரும்பு பயிர்கள் அடுத்த மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், இக்கரும்பு தோட்டங்களில் இரவு நேரங்களில் கூட்டமாக செல்லும் காட்டு பன்றிகள், கரும்புகளை கடித்தும் அதன் கூர்மையான மூக்கால் உடைத்தும் நாசம் செய்து வருகின்றன. இதனால், அக்கரும்புகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, சீட்டணஞ்சேரி கிராம விவசாயி பரசுராமன் கூறியதாவது: சீட்டணஞ்சேரி மற்றும் சாத்தணஞ்சேரி சுற்றி 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். இந்நிலையில், நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது காட்டு பன்றிகள் புகுந்து ஒரு ஏக்கர் பரப்பிலான கரும்புகளை நாசம் செய்துள்ளது. இதனால், பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரும்பு சாகுபடிக்காக வங்கியில் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த என்ன செய்வதென்ற கவலை ஏற்பட்டு உள்ளது. எனவே, சேதமடைந்த கரும்புகள் குறித்து தோட்டத்திற்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.