உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கம்பன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு நெல்வாய் கிராமத்தினர் அவதி

கம்பன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு நெல்வாய் கிராமத்தினர் அவதி

காஞ்சிபுரம்: கம்பன் கால்வாய் தரைப்பாலத்தின் மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நெல்வாய் கிராமத்தினர் அவதிபடுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது. இந்த கால்வாய் வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22 ஆயிரத்து, 235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, பாலாற்றில், 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கம்பன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளூர் - சோகண்டி சாலையில் இருந்து, நெல்வாய் கிராமத்திற்கு செல்லும் கிராமப்புற சாலை குறுக்கே, கம்பன் கால்வாய் தரைப்பாலத்தின் மீது, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ள நீரில், நெல்வாய், கள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் ஆபத்தான முறையில், கம்பன் கால்வாய் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். காஞ்சிபுரம், பரந்துார், பள்ளூர் ஆகிய பகுதி மக்கள், நெல்வாய், கள்ளிப்பட்டு ஆகிய பகுதிக்கு செல்ல மேல்பொடவூர் கிராமம் வழியாக, 2 கி.மீ., துாரம் நெல்வாய்க்கு மாற்றுப்பாதை வழியாக செல்கின்றனர். எனவே, கம்பன் கால்வாய் குறுக்கே, உயர் மட்ட தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் என, கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, கம்பன் கால்வாய் மாற்று வழித்தடத்தில் எடுத்து செல்லப்பட உள்ளது. அவ்வாறு செல்லும் போது, நெல்வாய் கிராமத்திற்கு உயர் மட்ட தரைப்பாலம் அவசியம் இருக்காது. புதிய நீர்வழித் தடத்தில், தேவை இருக்குமானால், புதிய தரைப்பாலம் அமைக்கும் போது, உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி