காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, கலை, அறிவியல், பொறியியல், ஐ.டி.ஐ., என, பல்வேறு படிப்பு முடித்த, 1,857 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், 85 நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். பங்கேற்ற 1,857 பேரில், 346 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, 340 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பணிக்கு தேர்வு செய்த இளைஞர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பணி ஆணைகளை இந்நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு துறை துணை இயக்குனர் அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பேசியதாவது:போட்டி தேர்வுகளுக்கு, காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. நாளிதழ், போட்டித்தேர்வு புத்தகங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், பெரிய அளவிலும், சிறிய அளவிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.இரு ஆண்டுகளில் 125 வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 15,000 பேர் பயனடைந்து உள்ளனர். இவ்வாறு அவர்பேசினார்.