| ADDED : பிப் 09, 2024 11:25 PM
காஞ்சிபுரம், :காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள காமராஜர் வீதியில், போதிய வசதிகளின்றி இருந்த பேருந்து நிழற்குடைக்கு பதிலாக, காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது. இங்கு, ஏ.டி.எம்., வசதி, கழிப்பறை என, சகல வசதியுடன் கட்டப்பட்டது. கட்டட பணிகள் முடிந்த நிலையில், கடந்த 4ம் தேதி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், இந்த பயணியர் நிழற்குடையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஏ.டி.எம்., பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், நிழற்குடையில் கட்டப்பட்ட மூன்று கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. கழிப்பறையில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுநீருக்கான இணைப்பு கூட வழங்காத நிலையில், கழிப்பறை பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே உள்ளது. கழிப்பறைக்கான கழிவுநீர் இணைப்பு கூட கொடுக்காமல், அவசர கதியில் திறந்து வைக்கப்பட்டதால், பயணியர் பலரும் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.