உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 8,000 உதவித்தொகை மத்திய அரசின் அறிவிப்பால் காஞ்சி நெசவாளர்கள் மகிழ்ச்சி

கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 8,000 உதவித்தொகை மத்திய அரசின் அறிவிப்பால் காஞ்சி நெசவாளர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்:மத்திய அரசு, 60 வயதை கடந்த கைத்தறி நெசவாளர்களுக்கு, தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 8,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது காஞ்சிபுரம் நெசவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் கொண்டு வருகின்றன. இருப்பினும், கைத்தறி நெசவாளர்களால், அவர்களது வாழ்க்கை தரத்தை, பொருளாதார அளவில் மேம்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, வயது முதிர்ந்த, மூத்த நெசவாளர்கள் பொருளாதார அளவில் அவதிப்படுகின்றனர். அவ்வாறு, வயதான நெசவாளர்களுக்கு பொருளாதார நெருக்கடியை தவிர்க்க, மாதந்தோறும் 8,000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்போவதாக, மத்திய அரசின் ஜவுளித்துறை அறிவித்துள்ளது. லோக்சபாவில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், 'நாடு முழுதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், பணியாளர்களின் நலன்களுக்கான திட்டம் செயல்படுத்த படவுள்ளது. அதில் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் 8,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு, தமிழக அரசு 1,200 ரூபாய் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கிறது. இந்த உதவித்தொகையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என, நெசவாளர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களிடையே ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த திட்டம், கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுமா அல்லது தனியார் நெசவாளர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுமா என்ற விரிவான திட்ட அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. காஞ்சிபுரம், சேலம், ஆரணி போன்ற ஊர்களில் கைத்தறி நெசவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தனியாரிடமும் பணியாற்றுகின்றனர். அவ்வாறு, தனியாரிடம் பணியாற்றி, 60 வயது முடிந்த நெசவாளர்களுக்கும் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த திட்டம் பற்றி மத்திய அரசின் ஜவுளித்துறை முழு விபரத்தையும் வெளியிட்டு, விரைவாக செயல்படுத்த வேண்டும் என, நெசவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை