உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டளிக்க 5 கி.மீ., நடக்கும் நகராட்சி மக்கள்

ஓட்டளிக்க 5 கி.மீ., நடக்கும் நகராட்சி மக்கள்

செங்கல்பட்டு : மறைமலைநகர் நகராட்சி, 13வது வார்டு மக்கள், ஓட்டுப் போட, 5 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க, தங்கள் பகுதியில், ஓட்டுச் சாவடி அமைக்க வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்தனர். மறைமலைநகர் நகராட்சியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சித் தலைவர் பதவிக்கு ஒன்பது பேர், 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சியில், 13வது வார்டுக்குட்பட்ட, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பில், 270 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்கள் ஓட்டுப் போட, திருக்கச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. கீழக்கரணை கூட்ரோடு, ஜி.எஸ்.டி., மெயின் ரோடு, சிங்கப்பெருமாள்கோவில் கேட் என, 5 கி.மீ, தூரத்தை கடந்தால் மட்டுமே, ஓட்டுச் சாவடிக்கு செல்ல முடியும். எனவே, 'தங்கள் பகுதியிலே ஓட்டுச் சாவடி அமைக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து, மறைமலைநகர் நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் அறலட்சுமி கூறும்போது, 'கலெக்டர் உத்தரவுப்படி, ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. அதற்குள், ஓட்டுச் சாவடியை மாற்றுவது கடினம். அடுத்த தேர்தலுக்குள் ஓட்டுச்சாவடியை, அவர்களின் குடியிருப்பு பகுதியில் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்