காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவன், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் குறித்த மர்மம் நீடிக்கிறது.சின்னகாஞ்சிபுரம் திருப்புக்குடல் தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ,34. தனியார்
கம்ப்யூட்டர் நிறுவனத்தில், ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கணவர்
அனந்தபத்மநாபன். இவர்களின் மகன் அரவிந்த்அர்சித்,13. தனியார்
மெட்ரிக்குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தான். கணவன் மனைவி
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் முறைப்படி விவாகரத்து
பெற்றனர். ஜெயஸ்ரீ தனது மகனுடன், தனியே வசித்து வந்தார்.கடந்த 18ம் தேதி
இரவு 8.45 மணிக்கு, ஜெயஸ்ரீ வேலை முடிந்து, வீட்டிற்கு சென்றார். வீட்டில்
அவரது மகன் அரவிந்த்அர்சித், கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து
கிடந்தான். தலை பாலிதீன் கவரால் மூடப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த ஆறு
சவரன் நகைகள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்தது.இது குறித்து
ஜெயஸ்ரீ விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். டி.எஸ்.பி.,
ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், தலைமையில் போலீசார் விரைந்து
சென்று, விசாரணை மேற்கொண்டனர்.சென்னை வடக்கு மண்டல போலீஸ்
ஐ.ஜி.,சைலேந்திரபாபு, காஞ்சிபுரம் எஸ்.பி., மனோகரன், கூடுதல் எஸ்.பி.,
பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். கொலையாளிளைப் பிடிக்க,
இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், சப்.இன்ஸ்பெக்டர்கள் துளசிநாராயணன், நடராஜன்
ஆகியோர் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை
போலீசார் ஜெயஸ்ரீ, அவருக்கு நெருக்கமானவர்கள், அனந்தபத்மநாபன் உட்பட
பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுவரை கொலையாளிகள் குறித்த விபரம்
தெரியவில்லை. இதனால், சிறுவன் சாவு குறித்த மர்மம் நீடிக்கிறது. இது
குறித்து டி.எஸ்.பி., ராஜேந்திரன் கூறும்போது,'பல கோணங்களில் விசாரணை
நடந்து வருகிறது. கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்த விபரத்தை, உறுதியாகக் கூற முடியாத
நிலை உள்ளது. எப்படியும் ஓரிரு நாளில், கொலையாளிகளைப் பிடித்து விடுவோம்'
என நம்பிக்கை தெரிவித்தார்.