உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏர்போர்ட்டுக்காக ஏகனாபுரத்தில் நிலம் எடுக்கும் பணி... அடக்கி வாசிங்க!:தேர்தல் வருவதால் வருவாய் துறைக்கு அரசு உத்தரவு

ஏர்போர்ட்டுக்காக ஏகனாபுரத்தில் நிலம் எடுக்கும் பணி... அடக்கி வாசிங்க!:தேர்தல் வருவதால் வருவாய் துறைக்கு அரசு உத்தரவு

காஞசிபுரம்:பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து போராடி வரும் ஏகனாபுரத்தில் மட்டும் நிலம் எடுக்கும் பணியை அரசு துவக்கவில்லை. சட்டசபை தேர்தல் வருவதால் அந்த கிராமத்தில் நிலம் எடுக்கும் விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் படி வருவாய்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்துார் சுற்றியுள்ள, 20 கிராமங்களில் அமைய உள்ளது. இதில் 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. விமான நிலையம் திட்ட மதிப்பு, 29,150 கோடி ரூபாய். பரந்துார் ஏ, பரந்துார் பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்துார், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய 20 கிராமங்கள், இதற்கான இடங்களை வழங்க உள்ளன. இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன. பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக, அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நிலங்களை கையகப்படுத்தும் பணி, ஜூலை மாதம் துவங்கியது. முதலில், பரந்துார், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் உள்ளிட்ட கிராமங்களில், நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.கையகப்படுத்த வேண்டிய 3,774 ஏக்கரில், தற்போது வரை 1,000 ஏக்கருக்கு மேலாக, நிலம் கையகபடுத்தப்பட்டு, 400 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களில், நில எடுப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், ஏகனாபுரம் கிராமத்திற்கான நில எடுப்பு பணிகள் மட்டும் இன்னும் துவங்கவில்லை. ஏகனாபுரம் கிராமவாசிகள், தங்கள் நிலங்களை, ஏர்போர்ட் திட்டத்திற்கு வழங்க இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற கிராமங்களை போல, பகுதியளவு மட்டும் பாதிக்கப்படாமல், ஏகனாபுரம் குடியிருப்பு, விவசாய நிலம் என ஊர் முழுதுமே பாதிக்கப்படுவதால், அந்த கிராமத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'சட்டசபை தேர்தல் வர உள்ளதால், ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டாம்; அடக்கி வாசியுங்கள்' என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், வருவாய் துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.தேர்தலுக்குபின், ஏகனாபுரம் கி ராமத்திற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கும் எனவும், வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தேர்தல் வரை வாய்ப்பில்லை பரந்துார் விமான நிலைய திட்ட நில எடுப்பு தாசில்தார் கூறியதாவது: ஏகனாபுரம் கிராமத்திற்கான நில எடுப்பு பணிகள், சட்டசபை தேர்தல் நடக்கும் வரை நடத்த வாய்ப்பில்லை. மற்ற கிராமங்களில் நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஏகனாபுரம் கிராமத்திலும், நில எடுப்பு பணிகள் பிரச்னை இன்றி நடக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். வெளியூரில் வசிக்கும் வியாபாரிகளை, அரசு அதிகாரிகள் அழைத்து வந்து, நிலங்களை ஆர்வத்தோடு வழங்குவது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர். இழப்பீடு பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி விடுவதாக, விவசாயிகளிடம், அதிகாரிகள் பயத்தை ஏற்படுத்துகின்றனர். அதனால், விவசாயிகள் சிலர் பயந்து, நிலங்களை கொடுத்துள்ளனர். நாங்கள் எதற்கும் அஞ்ச போவதில்லை. சட்ட பேராட்டம் துவங்கி உள்ளோம். நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏகனாபுரம் கிராம மக்களை அப்புறப்படுத்த முடியாது. - ஜி.சுப்பிரமணியம், தலைவர், ஏகனாபுரம் போராட்டக் குழு, காஞ்சிபுரம் மாவட்டம். ஏகனாபுரம் ஊராட்சி விபரம் மொத்த நிலம் - 900 ஏக்கர் கையகப்படுத்தப்பட வேண்டியது - 450 ஏக்கர் மக்கள் தொகை - 2,250 வாக்காளர்கள் -- 1,450 ரேஷன் அட்டை - 550


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை