சென்னை:சென்னையில் துவங்கியுள்ள, தேசிய அளவிலான,'மிஸ்டர் இந்தியா பாடிபில்டிங்' போட்டியில், மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்முடன் பங்கேற்று அசத்தினர்.இந்திய பாடிபில்டிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் சங்கம் மற்றும் ஜேப்பியார் பல்கலை இணைந்து நடத்தும் மிஸ்டர் இந்தியா பாடிபில்டிங் போட்டி, நேற்று துவங்கியது.தேசிய அளவிலான இப்போட்டிகள், ஓ.எம்.ஆர்.,யில் உள்ள ஜேப்பியார் பல்கலை வளாகத்தில், நேற்று மதியம் 3:00 மணிக்கு துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம், மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து, நேற்று துவங்கிய போட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு, மாஸ்டர்ஸ், பெண்களுக்கான பிரிவு, மாடல் பிசிக்ஸ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து 360 வீரர், வீராங்கனையர் ஆர்முடன் பங்கேற்று அசத்தினர்.ஒவ்வொரு பிரிவிலும், 55 வயது முதல் 75 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு என, தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கட்டுடலைக் காட்டி, பார்வையாளர்களை வியக்க வைத்தனர். இன்று, ஜூனியர் பாடிபில்டிங் மற்றும் மாடல் பிசிக்ஸ் ஆகிய பிரிவினருக்கு போட்டிகள் நடக்கின்றன.