ஜரிகை பரிசோதனை மையம் இடமாற்றம் வெளியூர் வாடிக்கையாளர்கள் குழப்பம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பட்டு சேலையின் ஜரிகை பரிசோதனை மையம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய இடம் பற்றிய விபரம் தெரியாமல், வெளியூர் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைகின்றனர். தமிழக அரசின் கைத்தறி துறை சார்பில், காஞ்சிபுரத்திற்கு பட்டு சேலை வாங்க வரும் வெளியூர் வாடிக்கையாளர்களுக்காக ஜரிகை பரிசோதனை மையம், காந்திரோட்டில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இங்கு, பட்டு சேலையை ஸ்கேன் செய்து அதில் உள்ள ஜரிகையின் தரம், தங்கம், வெள்ளி சதவீதம் பற்றி வாடிக்கையாளர்கள் அறிக்கை பெறலாம். இதற்காக, 106 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. அன்றாடம் ஏராளமானோர் இந்த பரிசோதனை மையத்தில், கடைகளில் வாங்கிய பட்டு சேலைகளை பரிசோதனை செய்து, ஜரிகை தரம் அறிந்து கொள்கின்றனர். வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு இந்த மையம் பெரும் உதவியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, காஞ்சிபுரம் காந்தி ரோடில், முருகன் கைத்தறி கூட்டுறவு சங்கம் அருகே இயங்கி வந்த இம்மையம், இம்மாதம் 1ம் தேதி முதல், சங்கூசாபேட்டை தெருவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய கட்டடத்தில் பரிசோதனை மையத்தில், இடமாற்றம் செய்யப்பட்ட எந்த அறிவிப்பும் இல்லாததால், பரிசோதனை மையம் எங்கு உள்ளது என, பட்டு சேலை வாங்க வருவோர் குழப்பம் அடைகின்றனர். பரிசோதனை மையம் இடமாற்றம் செய்ததே, அருகில் உள்ள கடைக்காரர்களுக்கு தெரியவில்லை. இதனால், ஜரிகை பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பரிசோதனை மையம் செயல்பட்ட முந்தைய கட்டடத்தில், இடமாற்றம் செய்ததற்கான அறிவிப்பு செய்ய வேண்டும் என, வெளியூர் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.