| ADDED : நவ 17, 2025 08:01 AM
திருப்பருத்திகுன்றம்: நவ. 17--: திருப்பருத்தி குன்றத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் மழைக்கு ஒழுகுவதால், அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் நனைந்து வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றத்தில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர், பல்வேறு கோரிக்கை மனு வழங்கவும், வீட்டு வரி, குழாய் வரி என, பல்வேறு வரி இனங்கள் செலுத்த ஊராட்சி அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கட்டடம் கட்டப்பட்டு, 40 ஆண்டுகளை கடந்துள்ளதால், கட்டட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, கூரையின் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால், ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், மழை பெய்யும்போது கட்டடம் ஒழுகுவதால், ஊராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள திருப்பருத்திகுன்றம் ஊராட்சி அலுவலக பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.