கனரக வாகனங்களால் பட்டா கிராமத்தினர் அவதி
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர், பட்டா ஆகிய கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பட்டா கிராம குடியிருப்பு சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.இரவு, பகலாக தொடர்ந்து இயங்கும் இந்த வாகனங்களால் அப்பகுதியினர் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:பட்டா கிராம சாலை வழியாக தொடர்ந்து இயங்கும் லாரிகளால், இப்பகுதி சாலை சேதமடைந்து வருகிறது. மேலும், லோடு லாரிகள் தார்ப்பாய் மூடாமல் இயங்குவதால், லாரிகளில் இருந்து கொட்டும் எம்.சான்ட், மணல் உள்ளிட்டவை சாலைகளில் தேங்கி அவை மண் புழுதியாக சாலையோரங்களில் இருபுறமும் உள்ள வீடுகளின் மேல் படிகிறது.இதனால், குடிநீர் உள்ளிட்டவை மாசு படுவதோடு, சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.எனவே, இப்பகுதியில் குடியிருப்பு சாலை வழியாக கனரக வாகனங்கள் இயங்குவதை தவிர்த்து மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அவர்கள் கூறினர்.