பொங்கல் விடுமுறைக்கு வெளியூருக்கு பறந்த மக்கள்: காஞ்சியில் சுற்றுலா தலங்கள் இல்லாததால் அவலம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்துடன் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் போன்ற பகுதிகள் இருந்தபோது, 4,300 ச.கி.மீ., கொண்ட பெரிய மாவட்டமாக இருந்தது.கடந்த 2019ல் மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தனியாக செயல்பட துவங்கியது. இதனால், பெரும்பாலான சுற்றுலா தலங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே இடம் பெற்றுவிட்டது. வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், மாமல்லபுரம், முட்டுக்காடு படகு குழாம், ஆலம்பர கோட்டை, முதலை பண்ணை, வண்டலுார் உரியியல் பூங்கா போன்ற அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன.சென்னையில் வசிப்போர் இந்த சுற்றுலா தலங்களுக்கு தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மாவட்டம் பிரிந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், எந்தவித சுற்றுலா தலங்களும் இன்றி காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது, 1,704 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில், நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. ஆனால், அனைத்து தரப்பினரும் சென்று பொழுதுபோக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலா இடங்கள் இல்லாதது, காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.உள்ளூரில் எந்தவித பொழுதுபோக்கு மையங்களும் இல்லாததால், பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையில், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாதுமலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் போன்ற இடங்களுக்கு ஆர்வத்துடன் செல்கின்றனர். ஆனால், வெளி மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சுற்றுலா பயணியர் வருவதில்லை. எந்தவித சுற்றுலா இடங்களும் இல்லாததால், வெளிமாவட்ட மக்கள் வர தயங்குகின்றனர்.பொங்கல் விடுமுறை நாளை வரை இருப்பதால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பலரும் வெளியூர் சென்றுவிட்டனர். சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய சுற்றுலா துறை அலட்சியமாக இருப்பதாலேயே, சுற்றுலா தலங்களை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.