நாட்டு நலப்பணி திட்ட முகாமில் 1,000 மரக்கன்றுகள் நடவு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் கிராமத்தில், சங்கராபுரம் ஆதி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அதில், கல்லூரி மாணவர்கள் சார்பில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதை தொடர்ந்து, விசூர் சமூக காட்டில் தேக்கு, வேங்கை, அத்தி, மகிழம், நீர் மருது, பாதாம் உள்ளிட்ட 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. பின், மண் வளம் காப்பது குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.