காந்தி சாலையில் டூ -- வீலர் செல்ல தனி பாதை அமைப்பு நெரிசலை குறைக்க முன்னோட்டம் பார்க்கும் போலீஸ்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில், பட்டு சேலை வாங்குவதற்காக, வெளியூர்வாசிகள் அன்றாடம் வருவதால், நகரின் முக்கிய சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.அதேபோல, கோவில்களுக்கு வரும் பக்தர்களும், தங்களின் கார்களை ஆங்காங்கே நிறுத்துவதால், நெரிசல் ஏற்படுகிறது. நகரில் அதிக நெரிசல் ஏற்படும் பகுதியாக, காந்தி சாலை உள்ளது. முகூர்த்த நாட்களில், ரங்கசாமி குளம் முதல் மூங்கில் மண்டபம் வரை, வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்து வந்தனர்.இந்நிலையில், முதற்கட்டமாக காஞ்சிபுரம் காந்தி சாலையில், இருசக்கர வாகனங்கள் மட்டும் எளிமையாக செல்ல தனி பாதையை போலீசார் அமைத்துள்ளனர். மூங்கில் மண்டபம் முதல் தேரடி வரை இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு, தடுப்புகள் அமைத்து தனி பாதையை ஏற்படுத்தியுள்ளனர்.காந்தி சாலையின் ஒரு புறம் மட்டும் தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. காந்தி சாலையின் எதிர்புறமும், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான தனிபாதை அமைக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என, போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். இருசக்கர வாகனகங்கள் மட்டும், தனி பாதையில் எளிதாக செல்ல முடியும் என்கின்றனர்.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:காந்தி சாலையில் அதிக நெரிசல் ஏற்படுவதால், இருசக்கர வாகனங்கள் எளிமையாக சென்று வர இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கிறோம். முகூர்த்த நாட்களில், இந்த நடவடிக்கை எப்படி பலனளிக்கிறது என்பதை கண்காணிக்க உள்ளோம்.அதேபோல, தேரடி முதல் மூங்கில் மண்டபம் வரை, இருசக்கர வாகனங்கள் செல்ல தனி பாதை அமைக்கப்படும். அதையடுத்து, ராஜவீதிகள், பூக்கடை சத்திரம், கீரை மண்டபம் ஆகிய இடங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.