உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ரத்ன அங்கி சேவை அலங்காரம்

 ரத்ன அங்கி சேவை அலங்காரம்

காஞ்சிபுரம்: தாததேசிகர் சாற்றுமறை உத்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை அலங்காரத்திலும், தாயார் கல் இழைத்த கிரீடம் அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் உள்ள உத்சவர் வரதராஜ பெருமாள் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுதோறும் தாததேசிகர் சாற்றுமறை உத்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய இரு நாட்களில் மட்டுமே வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, தாததேசிகர் சாற்றுமறை உத்சவத்தையொட்டி நேற்று காலை வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவையிலும், தாயார் கல் இழைத்த கிரீடம் அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, ஆழ்வார் பிரகாரம் வழியாக வலம் வந்து தாததேசிகர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தேசிகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மதியம் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் பெருமாளும் தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ரத்னஅங்கி சேவையில் எழுந்தருளிய வரதராஜபெருமாளை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். வரும் டிசம்., 30ம் தேதி, வைகுண்ட ஏகாதசியன்று வரதராஜ பெருமாள் மீண்டும் ரத்னஅங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை