உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆக்கிரமிப்பாளர்களுடன் வருவாய் அதிகாரிகள்... கைகோர்ப்பு!  1,776 ஏக்கர் அரசு நிலத்தை மீட்காமல் வேடிக்கை

ஆக்கிரமிப்பாளர்களுடன் வருவாய் அதிகாரிகள்... கைகோர்ப்பு!  1,776 ஏக்கர் அரசு நிலத்தை மீட்காமல் வேடிக்கை

காஞ்சிபுரம், ; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 663 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலங்கள்; 1,113 ஏக்கர் பிற வகை நிலங்கள் என, மொத்தம் 1,776 ஏக்கர் அரசு நிலங்கள், இன்று வரை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இவற்றை மீட்க முடியாமல், வருவாய் துறை திணறி வருகிறது.சென்னைக்கு மிக அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளதாலும், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வசதிகள் நிறைந்த மாவட்டம் என்பதாலும், இங்குள்ள நிலங்களின் மதிப்பு உயர்வாகவே உள்ளது.மேலும், சென்னை - பெங்களூரு விரைவு சாலை, பரந்துார் புதிய விமான நிலையம் போன்ற திட்டங்கள் அடுத்தடுத்து வர உள்ளதால், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. இதனால் உள்ளூர் அரசியல்வாதிகள், வசதி படைத்தோர் போன்றோர், ஏராளமான அரசு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன.

அலட்சியம்

ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சரவணகண்ணன் தலைமையில் குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில் போதிய நடவடிக்கை இல்லாததால், இந்த இரு தாலுகாவிலும், தற்போதும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.அதேபோல், நீர்நிலை புறம்போக்கு நிலங்களும், ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பில் சிக்கிஉள்ளன. இவற்றை மீட்க வேண்டிய வருவாய் துறையினர், அலட்சியமாக உள்ளதால், மீதமுள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.உயர்நீதிமன்ற உத்தரவு கெடுபிடி காரணமாக, கடந்த 2022ல், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், பல இடங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அதிகாரிகள் மீட்டனர்.ஆனால், அடுத்து வந்த 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் என, முக்கிய அதிகாரிகள் கண்டுகொள்வதாக இல்லை.இதனால், கடந்த இரு ஆண்டுகளாக, அரசு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணிகள் முடங்கியுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை வருவாய் துறையினர் பாதுகாக்க வேண்டும்.அரசு நிலத்தை ஆக்கிரமித்து, போலி பத்திரம் தயார் செய்து, பட்டா பெற்று விற்ற சம்பவங்கள், பலமுறை நடைபெற்றுள்ளன. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 1,836 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுஉள்ளது. இதில், 1,173 ஏக்கர் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீதமுள்ள 663 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள் இன்னும் மீட்கப்படாமலேயே உள்ளன.

விவசாயம்

இதேபோல், நீர்நிலை அல்லாத பிற வகையான அரசு நிலங்கள், 1,233 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில், வெறும் 120 ஏக்கர் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன.மீதமுள்ள, 1,113 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள், மீட்கப்படவில்லை.அந்த வகையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பிற வகை அரசு நிலங்கள் என, மாவட்டம் முழுதும், 1,776 ஏக்கர் நிலங்கள், இன்றைய தேதியில் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பல்வேறு புகார்கள் வருகின்றன. ஆனால், அந்த இடங்களை நேரில் பார்க்க கூட, அதிகாரிகள் செல்வதில்லை. அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர், அந்த இடங்களில் தொழில் நிறுவனங்களை நடத்துகின்றனர். பலர், ஏக்கர் கணக்கில் அரசு நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். ேஹாட்டல், மரம் அறுக்கும் ஆலைகளும் வைத்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் போன்ற அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் கூட்டு வைத்து, ஆக்கிரமிப்புக்கு துணை போகின்றனர். ஆக்கிரமிப்பு வீடுகளை கண்டுகொள்ளாமல் விடுவதால், பல ஆண்டுகளுக்குப் பின், அவர்களை காலி செய்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் துறை பணிகள் ஏற்கனவே மெத்தனமாக நடைபெறுவதாக, பல்வேறு புகார்கள் உள்ளன. தற்போது, ஆக்கிரமிப்பு நிலங்கள் எப்போது மீட்கப்படும் என்பதும், விடை தெரியாத கேள்வியாகவே நீடித்து வருகிறது.

மிகப்பெரிய ஆக்கிரமிப்புகள்

வேகவதி ஆற்றின் இரு கரைகளில் இருக்கும், 1,400 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, அதிகாரிகளால் முடியவில்லை. இதனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 200 கோடி ரூபாய் மதிப்பில், கீழ்கதிர்பூரில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன குன்றத்துார் தாலுகாவில் உள்ள அணைக்கட்டு தாங்கல் ஏரியில், 133 ஏக்கர் முழுதும் ஆக்கிரமிப்பு செய்து, நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஏரி இருந்த இடமே தெரியாத நிலை உள்ளது படப்பை அருகே புஷ்பகிரி கிராமத்தில் உள்ள, 160 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மணிமங்கலம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை, இன்று வரை அகற்றவே முடியாத நிலை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜூலை 29, 2024 15:54

ஆக்கிரமிப்பாளர்களை தட்டிக் கேட்டா அருவாளால வெட்டுவார். அப்போ அதிகாரிங்க உயிருக்கு யார் கேரண்டி?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி