ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் ஊராட்சியில், கால்வாய் முறையாக பராமரிக்காமல் துார்ந்து போனதால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அதனால், நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து, மேட்டுப் பாளையம் செல்லும் சாலை வழியே, ஒரகடம், வல்லக்கோட்டை, வல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமானோர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தவிர, சுங்குவார்சத்திரம் மற்றும் ஒரகடம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. இந்த சாலையில் உள்ள சிறுபாலத்தின் ஒருபுறம், கால்வாய் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எச்சூர் பிரதான சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் வழியும் கழிவுநீரால், நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தடுக்க, அப்பகுதியில் உள்ள கால்வாயை துார்வாரி பராமரிக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.