காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கும் பெண்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ரெட்டை மண்டபம் சிக்னல், கங்கைகொண்டான் மண்டபம், மேட்டுத் தெரு, காந்திரோட்டில் உள்ள பட்டு சேலை கடைகள் ஆகிய பகுதிகளில், கை குழுந்தைகளுடன் பெண்கள் பலர் அன்றாடம் யாசகம் கேட்டு, பொதுமக்களை தொந்தரவு செய்து வருகின்றனர். குழந்தைகளை வைத்து யாசகம் கேட்க கூடாது என, குழந்தை பாதுகாப்பு குழுமத்தினரும், போலீசாரும் அப்பெண்களை பல முறை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இருப்பினும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வரும் இப்பெண்கள், காஞ்சிபுரம் முழுதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று, அன்றாடம் குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு பயணியர், வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்கின்றனர். கடும் வெயிலில் குழந்தையை வைத்துக் கொண்டு திரிவதால், குழந்தைகள் மயக்க நிலையில் இருப்பதை கண்டு, பயணியர், மக்கள் பார்த்து பரிதாபப் படுகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை சோதனை நடத்தி, குழந்தைகளை மீட்டதோடு, பெண்களை காப்பகங்களில் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், யாசகம் கேட்டு தொந்தரவு செய்வது குறைவதாக இல்லை. குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, இப்பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குறையும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.