உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மைதானத்தில் மண் குவியல் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

பள்ளி மைதானத்தில் மண் குவியல் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குப்பேட்டையில் உள்ள டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு செப்., மாதம் மழை பெய்தபோது, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியது.இதன் காரணமாக கொசுத்தொல்லை அதிகரித்தது. மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர், பள்ளி மைதானத்தை ஆய்வு செய்தனர்.பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேறும் வகையில் மைதானம் முழுதும் மண் கொட்டப்பட்டு, மழைநீர் சேகரிப்பு ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., எழிலரசன் தெரிவித்தார்.இதை தொடர்ந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாநகராட்சி சார்பில் லாரி வாயிலாக மண் கொண்டு வரப்பட்டு, மழைநீர் தேங்கிய பகுதியில் குவியல் குவியலாக கொட்டப்பட்டது. ஆனால், மண் குவியலை பரப்பி, மைதானத்தை சமன் செய்யாமல், சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதனால், தற்போது விளையாட்டு மைதானத்தில், செடி, கொடிகள் வளர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானம் இருந்தும், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், மைதானத்தில் மாணவர்கள் விளையாட முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை