வீட்டிற்குள் ‛ரிட்டர்ன் ஆகும் கழிவுநீர் பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு
காஞ்சிபுரம்:-காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுகொட்டி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரமாக வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் இருந்து கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.இதனால், இத்தெருவாசிகள் ஒருவாரமாக சொந்த வீடு இருந்தும் குளியல் அறை, கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பஞ்சுகொட்டி தெருவினர் கூறியதாவது:எங்கள் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், வீட்டில் உள்ள கழிப்பறையையும், குளியல் அறையையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், உறவினர்கள் வீட்டிற்கும், பொது கழிப்பறைக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர் வீட்டிற்குள் ‛ரிட்டர்ன்' ஆவதால் துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்குவதால், வீட்டிற்குள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் பெயரளவிற்கு அடைப்பு நீக்குகின்றனர். ஓரிரு நாளில் மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. எனவே, பஞ்சுகொட்டி தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.