பாதை வசதி இல்லாத சுடுகாடு வயல்வெளியில் செல்லும் அவலம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் காரணை ஊராட்சியில், 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, உள்ளம்பாக்கம், வயலூர், காரணி மண்டபம், நடுப்பட்டு, மேட்டுப்பாளையம், நரிக்குறவர் காலனி, நோனம்பூண்டி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.காரணை பகுதியில் உள்ள சுடுகாடு செல்ல பாதை வசதி இல்லாமல் உள்ளது. இதனால், சுடுகாடு இருந்தும், பாதை வசதி இல்லாததால், தனிநபர்களின் விவசாய நிலத்தின் மீது, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.மேலும், தனிநபர்களின் விளைநிலங்களில் நெற்பயிர் நடவு செய்யும் நேரங்களில், இறந்தவர்களின் உடலை நெற்பயிரின் மீதே சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள், மாவட்ட குறைதீர் கூட்டத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர்.ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காரணை சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.