| ADDED : நவ 27, 2025 04:49 AM
பழவேரி: பழவேரியில், பழங்குடியினர் குடியிருப்பில் பரவும் மண் புழுதியால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னங்களுக்கு ஆளாகி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி சாலையையொட்டி 30 பழங்குடியினர் குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பின் எதிர்புறம் அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தாவரம் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களின் ஒரு பகுதியை விலைக்கு பெற்ற தனியார் நிறுவனம் அந்த இடத்திதல் கல் அரவை தொழிற்சாலை துவக்கி செயல்படுத்தப்படுகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து, லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் பழவேரி சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இயங்குகிறது. இந்த வாகனங்களால் சாலையில் ஏற்படும் மண் புழுதி மற்றும் கிரஷரில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவை பழங்குடியினர் குடியிருப்பில் புகுந்து அப்பகுதி மக்களுக்கு ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், வீட்டிற்குள் வைக்கும் தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றிலும், மண் புழுதி பரவி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பழவேரி பழங்குடியினர் குடியிருப்பில் மண் புழுதி பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.