ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், ஒப்பந்ததாரர் குளறுபடியால், பாதாள சாக்கடை திட்டம் துவங்கி, 11 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராமல், இழுபறியாக உள்ளது. அரைகுறை பணிகளால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 60,000 பேர் வசிக்கின்றனர். ஆன்மிக ஸ்தலமாகவும், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகவும் உள்ளது.ஸ்ரீபெரும்புதுாரை சுற்றி இருங்காட்டுக்கோட்டை, வல்லம், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் என, ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.இங்குள்ள நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் சொந்த வீட்டிலோ அல்லது வாடகை வீட்டிலோ வசிக்கின்றனர்.இதனால், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரின் உட்கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இல்லாத ஸ்ரீபெரும்புதுாருக்கு, புதிதாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. தொலைநோக்கு பார்வை
அதன்படி, 2013 ஆகஸ்ட் மாதம், மத்திய அரசின் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின்படி, 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணி துவக்கப்பட்டது.வரும் 2042ம் ஆண்டு மக்கள்தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டம் துவக்கப்பட்டது.மொத்தமுள்ள 15 வார்டுகளும், 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பணிகளை மேற்கொள்ள துவங்கியது.பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், 6,000 இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016ல் பணிகள் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது.ஆனால், 10 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை நிறைவுபெறாமல் உள்ளது. திட்டம் துவக்கப்பட்ட போது இருந்த மக்கள்தொகையை காட்டிலும், தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 24,864 பேர் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். தவிர, சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கியிருந்தனர்.கடந்த 10 ஆண்டுகளில், ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றி தொழிற்சாலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, வெளி மாநிலம் மற்றும் மாவட்ட ஊழியர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.இதனால், பாதாள சாக்கடை துவக்கப்பட்டபோது இருந்த மக்கள் தொகையை காட்டிலும், 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 60,000த்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.மேலும், தொழிற்சாலை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை.இதனால், ஸ்ரீபெரும்புதுாரில் தற்போது கழிவுநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில், கழிவுநீர் தொட்டி நிரம்பி, வீடுகளின் உள்ளே கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. மெத்தனப்போக்கு
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டிருந்தால், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், சரியாக திட்டமிடாமல், மெத்தனப்போக்குடன் சென்னை குடிநீர் வாரியம் செயல்பட்டதே காலதாமதத்திற்கு முக்கிய காரணம்.இதனால், மக்கள் நலனுக்காக அரசு ஒதுக்கிய நிதி வீணாகி வருகிறது. பேரூராட்சியின் அடிப்படை வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், சுகாதாரத்திற்கும் தேவைப்படும் பாதாள சாக்கடை திட்டம், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:பாதாள சாக்கடை பணிகள் துவக்கப்பட்டபோது, 2016 வரையில், ஒப்பந்ததாரர் வாயிலாக 79 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ஒப்பந்ததாரர், குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்காததாலும், பணிகளை சரியாக செய்யாததாலும், அவரது ஒப்பந்த பணியை 2018ல் ரத்து செய்தோம்.பின், 2020ல் கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டுகள் பணிகள் நடக்கவில்லை. மறு ஒப்பந்தப்புள்ளி பணிகள் முடிய ஓராண்டு தாமதமாகிவிட்டது.தற்போது, பாதாள சாக்கடை திட்டத்தில் 96 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 85 கோடி லிட்டர் கொள்ளளவு உடைய சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரித்து, 600 மி.மீ., விசைக்குழாய் வாயிலாக 11 கி.மீ., துாரத்தில் உள்ள மலைப்பட்டு கிராமத்தில் துவங்கும் அடையாறு கிளை கால்வாயில் விடப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.