டி.வி.ராமசுப்பையர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் வரலாற்று துறையும் இணைந்து நடத்திய தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 15வது அறக்கட்டளை சொற்பொழிவு நேற்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அரங்கில் நடைபெற்றது. வரலாற்று துறை தலைவர் அமுதகுமாரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஹென்றி ராஜா தலைமை வகித்தார். அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் வெங்கடேசன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் பேராசிரியர் மோகன்தாஸ் டி.வி.ராமசுப்பையர் அறக்கட்டளை குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் தினமலர் நாளிதழை உருவாக்கிய டி.வி. ராமசுப்பையர் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் படித்தவர். அவரது பிள்ளைகளும் இந்த கல்லூரியில் படித்தனர். முன்னாள் மாணவர் சங்க கட்டடம் கட்டுவதில் அவரது வாரிசுகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றார். ரூபன் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் லாரன்ஸ், 1937 முதல் 67 வரை உள்ள கால கட்டங்களில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நிர்வாகத்தின் வரலாற்று நிகழ்வுகள் என்ற தலைப்பில் பேசினார். உதவி பேராசிரியர் வின்ஸ் ஜோயல் நன்றி கூறினார்.