வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்: கரூர் கலெக்டர் தகவல்கரூர் ஆக. 21-'வீடு வீடாக சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி நடக்கிறது' என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கப்பட்டும். ஓட்டுச்சாவடிகள் திருத்தி அமைக்கப்படும் மற்றும் மறுசீரமைக்கப்படும். வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை யில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். பட்டியலில் மங்கலான, மோசமான, தரமற்ற, குறிப்பிடத்தக்க மற்றும் மனிதரல்லாத படங்களை மாற்றி, நல்ல தரமான புகைப்படங்களை உறுதி செய்வதன் மூலம் புகைப்படத்தின் தரம் மேம்படுத்தப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ள பிரிவு மற்றும் பகுதிகளை மறுசீரமைக்கப்படும். இவற்றில் முதல்கட்டமாக, வீடு வீடாக சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி வரும் அக்., 18 வரை நடக்கிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்., 29-ல் வெளியிடப்படும். திருத்தங்கள் இருப்பின், அக்., 29 முதல் நவ., 28 வரை அவகாசம் வழங்கப்படும். டிச., 24-க்குள் கோரிக்கை மனுக்கள் மீது, தீர்வு காணப்படும். 2025 ஜன 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, இணைய வழி https://voters.eci.gov.in/ என்ற முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். பட்டியலில் பெயர் சேர்க்கும்போது, விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக குடிநீர், மின்சாரம், காஸ் இணைப்பு, ஆதார் அடையாள அட்டை, வங்கி அஞ்சலக கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், விவசாய அடையாள அட்டை, வாடகை குத்தகை பத்திரம், வீடு விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம். 25 வயதுக்கு உட்பட்டோர் வயது சான்று இணைப்பது கட்டாயம்.இவ்வாறு, அவர், கூறினார்.