கரூர்:கரூர், மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் கொடுத்த புகாரின்படி, போலி ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தான செட்டில்மென்ட்
இந்நிலையில், நிலத்தின் அசல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகக் கூறி, நேற்று முன்தினம் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுக்க வந்த பிரகாஷ், 48, கூறியதாவது:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என் நண்பர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில், எலக்ட்ரிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறேன். விஜயபாஸ்கருக்கும், எனக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்ளது. சமீபத்தில் தறி போட, தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் என், 22 ஏக்கர் நிலத்தை, விஜயபாஸ்கர் விற்பனைக்கு கேட்டார். உறவினர் மகன் பிரவீன் பெயரில் எழுதித் தருமாறு கேட்டார். நான் தர மாட்டேன் என சொல்லி விட்டேன். இதனால் என், 22 ஏக்கர் நிலத்தை மகள் ஷோபனா பெயரில் பிப்., 2ல் தான செட்டில்மென்ட் செய்து விட்டேன். இதையறிந்த விஜயபாஸ்கர், பிரவீன் உட்பட பலர் பிப்., 27ல் வாங்கல் காட்டூரில் உள்ள என் வீட்டில் என்னை மிரட்டி, பரமத்தி வேலுாரில் இருந்து, அன்றிரவு காரில் கரூருக்கு கடத்திச் சென்று அடித்தனர். ஏப்., 4ல் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் என் வீட்டுக்கு வந்து, அசல் ஆவணங்களை கேட்டு மிரட்டினர்.பின் போலி ஆவணங்களால், என் மகள் ஷோபனா, மனைவி சசிகலா ஆகியோரை மிரட்டி, 22 ஏக்கர் நிலத்தை ரகு, சித்தார்த்தன், வக்கீல் மாரப்பன், செல்வராஜ் ஆகியோர் பெயரில் மேலக்கரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஏப்., 6ல் கிரையம் செய்து கொண்டனர்.நிலத்தின் அசல் ஆவணங்கள் என்னிடம் உள்ளதால், போலி ஆவணங்களால் கிரையம் செய்த நபர்களுக்கு, ஆவணங்களை தரக்கூடாது என, மேலக்கரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், மே 11ல் மனு கொடுத்தேன்.இதனால், மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் புகாரின்படி, யுவராஜ், பிரவீன், உட்பட ஏழு பேர் மீது கடந்த, 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் உள்ளதால், விஜயபாஸ்கர் மீது புகார் கொடுக்காமல் இருந்தேன். தற்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், புகார் கொடுக்க வந்தேன்.என் குடும்பத்தாரை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த வழக்கில் தன்னை கைது செய்து விடாமல் இருக்க, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த, 12ல் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நில அபகரிப்பு
விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், முன்ஜாமின் மீதான விசாரணையை வரும், 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், கரூர் டவுன் போலீசார் விசாரித்து வந்த நில அபகரிப்பு தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு நேற்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், பிரகாஷ் அளித்த புகார் மீது கரூர் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.