குளித்தலை, ஆக. 22-குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்.,ல், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மூன்று வீட்டு மனை கட்டுமான பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். பின், பயனாளிகள் தமிழ்ச்செல்வி, பத்மாவதி, ராசு ஆகியோரிடம் அதற்கான உத்தரவு ஆணையை கலெக்டர் வழங்கி, முறையாக தரமாக வீட்டுமனைகளை கட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, வதியம் பஞ்., கண்டியூர் பாம்பலாயி நகர் சாலையின் இரு புறங்களிலும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பயனாளிகள் மரக்கன்றுகள் நடப்பட்டதையும், அதனை பாதுகாக்கும் வகையில் வேலி அமைக்கும் பணியை பார்வையிட்டார். பின், வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் யூனியன் நடுநிலைப்பள்ளியில், ஆய்வு செய்து மாணவர்களின் கல்வித் திறன் குறித்து கேட்டறிந்தார்.சத்தியமங்கலத்தில் செயல்பட்ட வரும், அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்து, பணி மருத்துவர் மற்றும் நோயாளிகளிடம் சேவைகள் குறித்து கேட்டார். பின், யூனியன் அலுவலகத்தில் காத்திருந்த பொது மக்களிடம், கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை பார்வையிட்டார்.பின், குளித்தலை யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.