கரூர்:''மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம், 157.844 மெ.டன் துவரம் பருப்பு வினியோகம் செய்யப்படுகிறது,'' என, நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சகாய் மீனா தெரிவித்தார்.கரூர் மாவட்டத்தில், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சகாய் மீனா ஆய்வு மேற்கொண்டார். அதில், கிருஷ்ணராயபுரம் அருகில் சிவாயத்திலுள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு செய்தார்.அப்போது, அவர், கூறியதாவது:ரேஷன் கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கக் கூடிய அரிசி, பருப்பு. சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்காம்புலியூர் மற்றும் மாயனுார் பகுதியில் ரேஷன் கடைகளில், பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் கைரேகை கருவிகள், எடை இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்டத்தில், 402 முழுநேரம், 225 பகுதி நேரம் என, 627 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மூன்று லட்சத்து, 36 ஆயிரத்து, 905 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5320.111 மெ.டன் அரிசி, 430.160 மெ.டன் சர்க்கரை, 148.256 மெ.டன் கோதுமை, 18,367 லிட்டர் மண்ணெண்ணெய், 157.844 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 2,13,022 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு கூறினார்.கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் பல்கேற்றனர்.