கரூர், நில மோசடி வழக்கில், நிபந்தனை ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கையெழுத்திட்டு சென்றார்.கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 50, தொழிலதிபர். இவரது மகள் ஷோபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த ஜூன், 9ல், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.தொழிலதிபர் பிரகாஷ், கரூர் மாவட்டம் வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூன், 22ல், புகார் அளித்தார். அதில், தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் மகள் ஷோபனா பெயரில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டதாக கூறியுள்ளார்.அதன்படி, வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட சிலர் மீது கொலை மிரட்டல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளிலும், விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு கடந்த, 17 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இரு வழக்குகளிலும், மறு உத்தரவு வரும் வரை இரு போலீஸ் ஸ்டேஷன்களில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று, விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் கடந்த, 30ல் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று கரூர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகம், வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கையெழுத்திட்டு சென்றார்.