கரூர்: கரூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வில், 93.59 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. மாவட்டத்தில், 5,617 மாணவர்கள், 5,749 மாணவியர் உள்பட, 11,366 பேர் தேர்வு எழுதினர். அதில், 5,133 மாணவர்களும், 5,505 மாணவியர் உள்பட, 10,638 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 91.38 சதவீதமும், மாணவியர், 95.76 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கரூர் மாவட்டத்தில், 93.59 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு, 91.49 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பாண்டு, 2.10 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்தாண்டு, கரூர் மாவட்டம் மாநில அளவில், 20வது இடம் பெற்றிருந்தது. நடப்பாண்டு, 13வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கணினி மூலம் இலவசமாக மதிப்பெண் பட்டியல், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது.கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சணப்பிரட்டி ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளிகளுக்கு, 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளையொட்டி, மாணவ, மாணவியர் நேற்று வந்தனர். அப்போது, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இனிப்புகளை பரிமாறி கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.