செட்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டுள்ள அமராவதி ஆறு
கரூர்:கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவை, குடிநீர் தேவைகளை அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு. திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமராவதி ஆறு, கரூர் மாவட்டம், திருமுக்கூடலுார் என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில், திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். அப்போது, கரூர் நோக்கி வரும் தண்ணீர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கதவணையில் தேக்கி வைத்து, பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்படும். நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு, 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இங்குள்ள பாசன வாய்க்கால்களில், 25 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், செட்டிபாளையம் தடுப்பணையில் சிறிய அளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பணையில் இருந்து நீர் திறக்கப்படாததால், ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, அமராவதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.