கரூர் : ''விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது,'' என, பா.ஜ.,வேட்பாளர் செந்தில்நாதன் தெரிவித்தார்.கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, மணப்பாறை சட்டசபை தொகுதி வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள இனாம்புதுார், பண்ணப்பட்டி, வீரப்பூர், பழைய கோட்டை, வையம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில், பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தில், 24 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி கொண்டு இருக்கிறது. இதில், விற்கப்படும் ரசாயனம் கலந்த மது குடிப்பதால் உடலுக்கு கெடுதல் ஏற்படும். இதற்கு பதிலாக இயற்கையாக தயாரிக்கப்படும் கள்ளுக் கடைகள் திறக்கப்படும். மத்திய அரசு விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மண்வள ஆராய்ச்சிக்கு, 751 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் தமிழகத்தில், 70 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கல்வி, சுகாதார, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இங்கு, கால்நடை மருத்துவமனை நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. நிறைவேற்றும் வாக்குறுதிகளை மட்டுமே பா.ஜ., தருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சான், மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார், மணப்பாறை தொகுதி அமைப்பாளர் பொன்னுவேல் உள்பட கூட்டணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.