கலெக்டர் அலுவலகம் எதிரில் சேதமடைந்த நிழற்கூடம்
கலெக்டர் அலுவலகம் எதிரில்சேதமடைந்த நிழற்கூடம் கரூர், டிச. 25-கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகியவை, கரூர்- வெள்ளியணை சாலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் முகாம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இங்கு, மனு வழங்குவதற்காகவும், பல்வேறு சான்று பெறவும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகம் எதிர்புறம் உள்ள பஸ் ஸ்டாப்பில் பல ஆண்டுகளுக்கு முன் நிழற்கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. சரியான பராமரிப்பில்லாததால், நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு நிற்க பயணிகள் அச்சப்பட்டு சாலையில் நிற்கின்றனர். நிழற்கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதோடு, அதை முறையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.