| ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
குளித்தலை: குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுவற்றில், பயனுள்ள தகவல்களை மாணவர்கள் அறியும் வகையில் எழுத வேண்டும். குளித்தலை தாலுகா அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் இடையே, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் காவிரி நகர் எதிரில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிச்சுற்றுச்சுவரில் சேதமான கட்டடங்களுக்கு சிமென்ட் பூசப்பட்டு, பல்வேறு நிறங்களில் பெயின்ட் அடிக்கப்பட்டு துாய்மை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பள்ளி நிர்வாகம் பயன்படுத்தி, சுவற்றில் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள தகவல்களை எழுதலாம். அல்லது இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்களை வரைந்து வரிசைப் படுத்தி, காட்சிக்கு வைக்கலாம். இல்லையென்றால், திருக்குறள்களை எழுதி வைக்கலாம். பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற திட்டங்களை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. எனவே, பள்ளி சுவற்றில் அரசியல், திருமண விழா, துக்க நிகழ்ச்சிகள், சினிமா மற்றும் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட வாய்ப்புள்ளது. அதற்கு இடம் கொடுக்காமல், பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும். இது தொடர்பாக, சமூக ஆர்வலர் கருணாநிதி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.