| ADDED : ஜன 05, 2024 11:13 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மத்தகிரி பஞ்., தோகைமலை தரகம்பட்டி- பாளையம் நெடுஞ்சாலையில், கொசூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பஞ்.,க்கு உட்பட்ட பொது இடங்கள், வண்டி பாதைகளை ஆக்கிரமித்து, 20க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வணிக ரீதியாக வாடகை அடிப்படையில் சம்பாதித்து வந்தனர்.ஆக்கிரமிப்பை அகற்றி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்த போது, ஆக்கிரமிப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் உடனடியாக தாசில்தார் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க, 2023 அக்டோபரில் உத்தரவிட்டது. எட்டு வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் தாமாகவே அகற்றிக்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.அகற்றப்படாத நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு கடவூர் தாசில்தார் முனிராஜ், குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், வருவாய் துறையினர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ராஜேஷ், விசாலாட்சி ஆகியோர் கடைகளை அகற்றக்கூடாது என்று கூறி, பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இருவரையும் போலீசார் மீட்டு, சிந்தாமணி பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் நடைபெறும்.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால், அரசு பணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மாலை 5:00 மணி வரை திறக்கப்படவில்லை.